Sunday, January 23, 2011

திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்)

தொகுப்பாசிரியர் - "செந்தமிழ்ச்செல்வர்" "தமிழாகரர்" "நல்லாசிரியர்" முனைவர் ச. சாம்பசிவனார்

ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி, உங்களுடைய தொகுப்பை நான் உங்கள் ஆசியுடன் பதிவுலக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

முன்னுரை

தமிழர்கள், கடவுள் நம்பிக்கையுடையவர்கள், மிக மிகப் பழமையான "சிந்துவெளி நாகரிக" காலமுதற் கொண்டே "சிவ வழிபாடு" இருந்து வருவது என்பது ஆராய்ச்சியாளர்கள் கண்ட உண்மை. மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்டவராகிய தொல்காப்பியரும், சங்கப்புலவர்களும், செய்வப்புலவர் திருவள்ளுவர் முதலானோரும் கடவுள் நம்பிக்கையுடையவர்கள் என்பதோடு, கடவுளை வழிபட வேண்டியதன் இன்றியமையாமை பற்றியும் எடுத்துரைத்துள்ளனர்.

"திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்" என்பது நம்நாட்டுப் பழமொழி. ஒருவனது வாழ்க்கையின் வெற்றி தோல்வியை நிருனயிப்பது அவனது "திருமண வாழ்வே" யாம்! இத்தகு பெருமைக்குரிய திருமணத்தைக் கடவுள் வழிபாட்டோடு நடத்த வேண்டுவது. தமிழர் கடமை. தற்காலத்தில் "தமிழ் திருமணங்கள்" நடத்தப்பட்டு வருகின்றன.

வடமொழியில் மந்திரம் சொல்வோர் "இறைவனை எம்மொழியில் ஏத்தினால் ஏன்? என்பர். அஃது உண்மையே அதனால்தான், யாமும் "தமிழாலே ஏத்துவோம்" என்கின்றோம்.

"திருமுறைத் தமிழ் திருமணம்" தமிழோடும், தெய்வத் திருமுறைகளோடும் தொடர்புடையது, இத்திருமணத்தில் ஓதப்படும் திருமுறைகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் போன்ற அருளாளர்கள் அருளியவை; அனைத்துமே மந்திரங்கள்! எனவே இவற்றை ஓதித் திருமணத்தை நடத்தினால், மணமக்கள் இறைவனருளுடன் எல்லா நலமும், வளமும் பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது உறுதி!.

தமிழகப் பெருமக்களே! எம்பெருமான் மீது முழு நம்பிக்கை கொண்டு "திருமுறைத் தமிழ் திருமணத்தை" நடத்தி இறையருள் பெருக.

இதில், தமிழர் அனைவர்க்கும் பொதுவான மிக்கிய நிகழ்ச்சிகள் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சிக்கு ஏற்பத் திருமுறைப் பாடல்கள் தரப்பட்டுள்ளன.

திருமணவிழாவை முன்னின்று நடத்த ஒருவர் வேண்டும், உள்ளூர் ஓதுவார், அவரில்லையேல், சமுகத்தில் உள்ள ஒரு பெரியவராக இருக்கலாம்.

நிகழ்சியை அவ்வப்போது அவர் பலருக்கு அறியப்படித்தல் வேண்டும். அவர் படித்தபின், அந்த நிகழ்ச்சிக்கு உரிய பாடல்களை நன்கு பாடத்தெரிந்த ஒருவர், பண்ணோடு பாட வேண்டும். அப்படிப் பாட எவரும் இல்லையென்றால், திருமணத்தை முன்னின்று நடத்துபவரே மந்திரம் ஒதுவதுபோல் படித்தல் வேண்டும்.

திருமணவிழாவுக்கு வருகைபுரிந்தோர் அனைவரும், அமைதியாக இருந்து, திருமண நிகழ்ச்சிகளை கண்டும், கேட்டும், மகிழ்ந்து, விழா முடிவின்போது, மணமக்களை "வாழ்க மணமக்கள்" "வாழ்க மணமக்கள்" "வாழ்க மணமக்கள்" என்று மும் முறை ஒன்றாக சேர்ந்து வாழ்த்த வேண்டும்.

நாளைய பதிவில் மணமேடையில் வைக்கத் தக்க பொருட்கள் பற்றிப் பார்ப்போம்.

1 comment:

Unknown said...

சம்ஸ்கிருத திருமணத்திற்கு எதிராக திருமுறை திருமணம் தோன்றிய விதம் எப்படி? யார் உருவாக்கியது?? எதன் அடிப்படையில் இது நடைபெறுகிறது???

Post a Comment